இந்தியா சீனா இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் துவங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நடத்திய சந்திப்புக்குப் பிறகு இந்த பெரிய முன்னேற்றம் இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் நட்புறவு மேம்படும் என தெரிகிறது.நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்ததால், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி சேவைகளும் இரு நாடுகளுக்கும் இடையே பாதிக்கப்பட்டன. விமான இணைப்புகளை மீண்டும் தொடங்குவது, எல்லை கடந்த வர்த்தகம், இரு நாட்டு வணிகர்கள் இடையே வர்த்த கூட்டு முயற்சி அதிகரிக்கும், சுற்றுலாவும் இரு நாடுகளிலும் மேம்படும்.
இது இரு நாட்டின் பொருளாதாரதிற்கும் முக்கிய புள்ளியாக இருக்கும் என எதிர்பார்கபடுகிறது. அதேநேரம் விமான சேவை தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இரு நாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்திருக்கிறது. நேரடி விமான சேவையை மீண்டும் கொண்டுவருவதிலும், அதற்காக திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.
