இந்தியா திரில் வெற்றி பாகிஸ்தான் போராடி தோல்வி
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான இறுதி போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் விளையாடின இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கிய இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 146 ரன்கள் பெற்றது. பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடந்த ஆட்டங்களைப் போலவே அதிரடியைத் தொடருவார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 5 ரன்களிலும், துணை கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். இதனால், இந்திய அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவிப்புக்குள்ளானது அதன் பின்னர், கைகோர்த்த திலக் வர்மா – சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி – ஒரு சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அஃப்ராரிடம் வீழ்ந்தார்.
இறுதிக்கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவையாக இருந்தது. 19-வது ஓவரில் ஒரு விக்கெட் உள்பட 7 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக விளையாடிய துபே 22 பந்துகளில் 2 சிக்ஸர் – 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். முடிவில், இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் லீக், சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டி என பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணியே வெற்றி வாகையை சூடியுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பைத் தொடரில் 9-வது முறையாக கோப்பையை வென்று, கோப்பையைத் தக்கவைத்துள்ளது.
