இராமநாதபுரம் மாவட்டம் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது . இராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை இன்று வரை மிதமான முதல் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள கற்றழுத தாழ்வு மண்டலம் மேலும் வலுபெற்றுள்ளதால் கன மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டமான இராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இராமநாதபுரத்தில் முக்கிய பகுதியான தங்கச்சிமடத்தில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அது போல, தாழ்வான பகுதிகளான மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மண்டபம் கலைஞர் நகரில் உள்ள 11 குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தனி தீவாக மாறியுள்ளது. பாம்பன் அருகே உள்ள குந்துகால் பகுதியில் கடல் அதிகரித்து உள்ளதால், அப்பகுதி மீனவர்கள் அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்தாலும் மீன் வளத்துறையாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் படகுகளை பாதுகாக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடந்து பெய்து வரும் கனமழை மற்றும் சூறைக் காற்றால் இராமநாதபுரம் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் மீன்பிடிப்பிற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டதால் சுமார் 2000கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டுள்ளது. இதனால் கடலை நம்பியுள்ள 15,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக, ரூ.6 முதல் ரூ.8 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் விடுமுறையால் மக்கள் கூட்டம்
தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக, இராமேஸ்வரம் மற்றும் தனுசுகோடிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் ஐப்பசி அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடந்து 4 மணி நேரம் பெய்யும் கனமழையால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து உள்ளனர். மழைநீர் தேங்கிய இடங்களில் நடவடிக்கைகளை துரித படுத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடந்து, முக்கிய பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றவும், மழை நீர் தேங்காமல் இருப்பதற்காவும் மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து, வாழ்வை மந்தமாக்கியுள்ளது. இதேபோல் முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து, பனைமர உயரத்தில் அலைகள் எழுந்தன. கடல் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மேலும் பலத்த காற்றால் மணல் சாலைகளில் பரவி, வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள்
மண்டபம் 14.3 செ.மீ
பாம்பன் 11.3 செ.மீ
இராமேஸ்வரம் 9.5செ.மீ
