பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா-வில் இந்தியா வலியுறுத்தல்

palestine
Spread the love

 மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட, இறையாண்மையுள்ள சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் கொள்கையே ஒரே தீர்வு என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய கிழக்கு நிலவரம், குறிப்பாக பாலஸ்தீன விவகாரம் குறித்த திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், ‘பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமாகவுமே அமைதியை எட்ட முடியும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அமெரிக்காவின் முக்கிய முயற்சி அமைதிக்கான உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.

பயங்கரவாதத்தை இந்தியா கண்டிக்கிறது; அப்பாவி மக்களின் அழிவு, விரக்தி மற்றும் துன்பம் முடிவுக்கு வர வேண்டும்; பிணைக்கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்; காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும்; போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் அருகருகே அமைதியாகவும் பாதுகாப்புடனும் வாழும் இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, பாலஸ்தீனத்தை உருவாக வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கியாக இருக்கிறது.

இந்தியா நிதியுதவி

பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா இதுவரை 170 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உதவி வழங்கியுள்ளது.

இதில் 135 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கும். அதேபோல், லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் அமைதி திரும்புவதை இந்தியா விரும்புகிறது. சிரியாவில் அந்நாட்டு மக்களின் தலைமையிலான அரசியல் மாற்றத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது’ என்றார்.

700 கோடி டாலர் தேவை 

போர் காரணமாக காஸாவில் சிதைந்துள்ள சுகாதாரக் கட்டமைப்பை புனரமைக்க 700 கோடி டாலராவது தேவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போா் காரணமாக காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்துவிட்டது. அங்கு முழுமையாக செயல்படும் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. காஸாவின் சுகாதார அமைப்பை மறுகட்டமைப்பு செய்ய குறைந்தபட்சம் 700 கோடி டாலா் தேவைப்படும். ஒரு மருத்துவமனையை மட்டும் புனரமைப்பதற்கு 8 கோடி முதல் 10 கோடி டாலா் வரை செலவாகும்.

காஸாவில் நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை. அங்கு உதவிப் பொருள்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. உதவிப் பொருள்களின் வரத்து அதிகரித்திருந்தாலும், தேவையானவற்றில் அது ஒரு சிறு பகுதிதான் இன்னும் உதவிகள் தேவைப்படுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *