வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதன் தாக்கமாக மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 5 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மழை தொடரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறிப்பாக, சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 2025 அக்டோபர் 1ஆம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 02 – ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா- வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 03-ஆம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
