அமெரிக்க வரிகளால் இந்தியாவில் ஏற்படும் இழப்புகளை ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் சமப்படுத்தப்படும். வர்த்தக ஏற்றத் தாழ்வை நீக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என்று புடின் தெரிவித்தார்.
ரஷ்யாவில் நடைபெற்ற வால்டாய் விவாத மன்றத்தில் இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த புவியல்சார் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் சீனாவும், இந்தியாவும்தான் உக்ரைன் போருக்கு ‘முதன்மையான நிதியளிப்பாளர்கள்’ என்று குற்றம் சாட்டினார்.
இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும்படி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளைக் கண்டிக்கிறேன். இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாது. இந்தியா தனது நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும்.
ரஷ்யா – இந்தியா இடையிலான உறவுகளின் சிறப்பு தன்மையானது, சோவியத் யூனியன் காலத்திலிருந்தே தொடர்கிறது. இந்தியா தனது சுதந்திரத்திற்காகப் போராடிய காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நீடிக்கிறது. இதை இந்திய மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்; மதிக்கிறார்கள். இந்தியா அதை மறக்காததை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு ஒருபோதும் பிரச்னைகளோ, அரசுகளுக்கு இடையேயான பதற்றங்களோ இருந்ததில்லை. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது இதை இரு நாடுகளும் இணைந்து சரி செய்யும் என தெரிவித்தார்.எங்கள் வாய்ப்புகளையும், சாத்தியமான நன்மைகளையும் பயன்படுத்திக் கொண்டு, முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறப்பு கூட்டாண்மை பிரகடனம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
