கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கடந்த 1997ம் ஆண்டு செல்வராஜ் என்ற காவலர் கோவையில் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த, 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி, கோவையின் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், 58 பேர் கொல்லப்பட்டனர்; 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்பொழுது பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, கோவையில் தேர்தல் பிரசாரத்துக்காக விமான நிலையம் வந்ததார். மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. இதனால் கோவை நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கு அல் உம்மா அமைப்பு பொறுப்பேற்றதாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக, ‘அல் உம்மா’ இயக்க தலைவர் பாஷா, அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட, 167 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன. பல வருடங்களுக்கு பிறகு கடந்த 2007ல் முதல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பாஷா, அன்சாரி உள்பட பலருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு தலா, 10 ஆண்டு, 7 ஆண்டுகள் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிலர் மேல் முறையீடு செய்து விடுதலை செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி பாஷாவுக்கு வயது முதிர்வு காரணமாக திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் சிறை போலீஸார் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர். பரோல் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையை காரணம் காட்டி, பரோல் கேட்டு அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு 30 நாட்கள் பிணை வழங்கப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டது. ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஏ.பாஷாவை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இன்று (டிச.16) மாலை அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு உயிரிழந்த பாஷாவின் உடலுக்கு குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த பாஷாவின் உடல் பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர்அலி திப்புசுல்தான் மசூதியில் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படும்.