டெல்லி: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஏலத்தில் 4 வட்டாரங்கள் தமிழ்நாட்டுக்குள் உள்ள பகுதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய எரிசக்தி இயக்குனரகம் (DGH) சார்பில், OALP (Open Acreage Licensing Policy) திட்டத்தின் கீழ் 9வது சுற்று ஏலம் ஜனவரி 2024ல் நடைபெற்றது. இதன் அடிப்படையில், நாடு முழுவதும் 28 வட்டாரங்கள் குறிக்கப்பட்டிருந்தன. இதில், தமிழகத்தின் கன்னியாகுமரி அருகே தென்முனையில் 3 வட்டாரங்கள் மற்றும் சென்னைக்கு அருகே 1 வட்டாரம் அடங்கும் வகையில் மொத்தம் 32,485.29 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் ஏலம் விடப்பட்டது.
கன்னியாகுமரி தென்முனை – ஆழ்கடல் பகுதிகள்:
CY – UDWHP-2022/1 – 9,514.63 சதுர கிலோமீட்டர்
CY – UDWHP-2022/2 – 9,844.72 சதுர கிலோமீட்டர்
CY – UDWHP-2022/3 – 7,795.45 சதுர கிலோமீட்டர்
சென்னை அருகே – ஆழ்கடல் பகுதி:
CY – UDWHP-2023/1 – 5,330.49 சதுர கிலோமீட்டர்
இந்த ஏலத்திற்கு 03.01.2024 அன்று சர்வதேச அழைப்பாணை விடுக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் இறுதி தேதி 29.02.2024 என அறிவிக்கப்பட்டது. பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, இறுதியாக 21.09.2024 அன்று விண்ணப்பம் முடிவடைந்தது.
மத்திய எரிசக்தி இயக்குனரகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் இடையே போட்டி இருப்பதாக தெரிவித்திருந்தது. தற்போது, ஓ.என்.ஜி.சி-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் கடல் வளங்களை பாதிக்கும் என்ற காரணத்தால் மீனவ சமூகங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்நிலையில், மத்திய அரசு இந்தியா முழுவதும் 28 வட்டாரங்களில் உற்பத்தி அனுமதி வழங்கியுள்ளதாக ஆர்கஸ் மீடியா செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.