கொடைக்கானலில் உள்ள ஆபத்தான அஞ்சு வீடு அருவி மற்றும் வன அருவிகள் அனைத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் அருகே அமைந்திருக்கும் வன அருவிகளில் அதிகப்படியான உயிர் இழப்புகள் அடிக்கடி நடந்துவருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையை குறைப்பதற்காக தற்காலிகமாக தடை செய்துள்ளது.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் உள்ள ஆபத்தான அஞ்சு வீடு அருவி மற்றும் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகளை பார்வையிடுவதற்காகவும், குளிப்பதற்காகவும் சென்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதனால், அந்த அருவிகள் அனைத்தும் தற்காலிகமாக சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
வனத்துறை மற்றும் வருவாய்த்துறை வசமுள்ள அரசால் அனுமதிக்கப்படாத அருவிகளுக்கு சென்று பார்வையிட மற்றும் குளிப்பதற்கு முயற்சிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அதோடு, அந்த அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத் துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
