உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ ரக இலகுரக போர் விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிட்டார்.
முதல் சோதனை ஓட்டம் வெற்றி நாசிக்கில் புதிதாக நிறுவப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது உற்பத்தி மையத்தில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இந்த மையத்தில் ஏற்கனவே ஹெச்டி-40 என்ற பயிற்சி விமானமும், எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்களுக்கான ஒருங்கிணைப்பு மையமும் திறக்கப்பட்டிருந்தது. புதிய உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழா முடிந்தவுடன், தேஜஸ் எம்கே1ஏ விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது. தேஜஸ் எம்கே1ஏ ரக விமானம் வானில் பறந்தவுடன், விமான ஓடுதளத்தில் மரியாதை செலுத்தப்பட்டு, வெற்றிகரமான முதல் பயணத்தை கொண்டாடினர். இந்த நிகழ்வில் ராணுவ மற்றும் எச்ஏஎல் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். எச்ஏஎல் நிறுவனம் வடிவமைத்து தயாரித்த தேஜஸ் எம்கே1ஏ ரக விமானம், முன்னர் பயன்பாட்டில் இருந்த தேஜஸ் எம்கே1 ரகத்தை விட பல மேம்பாடுகளைக் கொண்டதாகும். அதில் நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி, மேம்பட்ட AESA ரேடார் போன்ற உள்நாட்டு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விமானத்தின் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 64 சதவீதமாகும். மொத்தம் 105 இந்திய நிறுவனங்கள் நேரடியாக இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளன. நாசிக்கிலுள்ள எச்ஏஎல் பிரிவில் 1,188 தொழில்நுட்ப நிபுணர்கள், 624 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 395 பொறியாளர்கள் என மொத்தம் 2,207 பணியாளர்கள் ஈடுபட்டர்.
இந்திய விமானப்படை, எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து மொத்தம் 97 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.62,370 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 25 அன்று கையெழுத்தானது. இதன் படி, விமானங்களின் தயாரிப்பு 2027-28 ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு ஆண்டுகளில் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும். அதில் 29 விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டதாக இருக்கும். விமான தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இன்ஜின்கள் அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திலிருந்து பெறப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டில் எச்ஏஎல், F404 ரக இன்ஜின்களுக்கு ரூ.5,375 கோடி மதிப்பில் ஆர்டர் செய்யப்பட்டது. இதுவரை நான்கு இன்ஜின்கள் கிடைத்துள்ளன. மேலும் எட்டு இன்ஜின்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் ஆண்டுக்கு 20 இன்ஜின்களை வழங்கும் திட்டமும் உள்ளது.
எச்ஏஎல் நிறுவனம், தற்போதுள்ள இன்ஜின்களைக் கொண்டு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. புதிய தேஜஸ் எம்கே1ஏ-யில் மொத்தம் 67 புதிய பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை முந்தைய தேஜஸ் எம்கே1 மாதிரியுடன் ஒப்பிடுகையில், அதிக தொழில்நுட்ப மேம்பாடுகளை பெற்றுள்ளன. தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானம் தற்போது ஆயுத சோதனை மற்றும் ரேடார் ஒருங்கிணைப்பு சோதனைகளுக்குத் தயாராகி வருகிறது. இவை வெற்றிகரமாக முடிந்தவுடன், புதிய விமானங்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும்.
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விமான படைக்கு தேவையான விமானங்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் நமக்கு தேவையான போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நவீனரக விமானத்தை தயாரித்துள்ளது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து இன்ஜின்கள் வரவழைக்கப்பட்டு, பொருத்தப்பட்டு மற்ற பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்தகைய விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மிக் விமானங்கள் தற்போது நீண்டகாலமாக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்புவதற்கு தேஜஸ் எம்கே 1ஏ ரக விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
