மகாராஷ்டிர துணை முதல்வர் + ரூ.1,000 கோடி சொத்துகள் விடுவிப்பு – அஜித் பவாரின் பவர்.

Spread the love

மகாராஷ்டிராவில் 2021 ஆம் ஆண்டு சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி வகித்தபோது, அவருடைய அலுவலகங்களில் வருமான துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பினாமி பெயரில் அவர் சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதாகக் கூறி சுமார் ரூ. 1000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றது. மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்று யாரும் எதிர்பாக்காத வெற்றியை பெற்றார்.

அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் இருந்த புகார்களைப் பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தான் தள்ளுபடி செய்து இருந்தது. அதைத் தொடர்ந்தே இப்போது கைப்பற்றப்பட்ட அவரது சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை தான் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்ற நிலையில், மறுநாளே அவரது சொத்துகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் கூறும்போது, “இதர கட்சிகளில் இருந்து பாஜகவில் சேரும் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவது வழக்கமானது. எங்கள் கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு அஜித் பவார் மாறினார். தற்போது அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு, சொத்துகள் விடுவிக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *