மலேசியாவில் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய கொரோனா வகை தற்போது மலேசியாவில் பரவி வருவதால், அங்கு பலருக்கு இன்புளூயன்சா மற்றும் மர்ம காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்குள் பள்ளிகளில் காய்ச்சல் பரவல் 14 இடங்களில் இருந்து 97 இடங்களுக்கு உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக பல பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் 5 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சுகாதார அதிகாரிகள் மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும், முககவசம் அணியவும் கேட்டுக்கொண்டுள்ளனர். வருகிற நவம்பரில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் இறுதி தேர்வை எழுதவுள்ள நிலையில் இந்த திடீர் தொற்று பரவல் அதிகரிப்பது கவலைக்கிடமானதாகும். இதனை உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பில் வைக்க வேண்டிய கொரோனா வகையாக வகைப்படுத்தியுள்ளது.
மலேசியாவின் பல பகுதிகளில், குறிப்பாக சிலாங்கூரில் மாணவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கின. அவை இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பிஏ மற்றும் பி தொற்றுகளின் அறிகுறிகளாகும். பரவல் மிக வேகமாக இருந்ததால் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பல பள்ளிகளை மூட உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் சுய தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட சுகாதார குழுக்களும் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள் குழுவாக கூடுவதை குறைக்கவும், முக கவசம் அணிவதை ஊக்குவிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான அதிகரிப்பு என மலேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் பள்ளிகள் மற்றும் மழலையர் பயிலும் இடங்களில் கண்டறியப்படுவதால், விரைவாக கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த தொற்றுநோய் பரவல் குறித்து மலேசியா முழுவதும் அச்சத்தில் இருந்தாலும் இந்த புதிய கோவிட் 19 மாறுபாடு XFG, மலேசிய விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் அதிகம் பரவும் தன்மை மற்றும் நோய் எதிர்ப்பிலிருந்து தப்பிக்கும் திறனை சுட்டிக்காட்டி உலக சுகாதார நிறுவனம், XFG ஐ “கண்காணிப்பில் உள்ள மாறுபாடு” என்று வகைப்படுத்தி உள்ளது. ஜூன் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை மாறுபாடு, இப்போது மலேசியாவின் 8% க்கும் அதிகமாக உள்ளது.
வளர்ந்து வரும் மாறுபாடுகளை கண்காணிக்கவும் சாத்தியமான சமூகப் பரவலை கட்டுப்படுத்தவும் சுகாதார அதிகாரிகள் மரபணு கண்காணிப்பை தீவர படுத்தியுள்ளனர். covid-19 தொடர்பான மலேசியாவில் முந்தய அனுபவத்தினால் இப்பொழுது அரசு தயார் நிலையை வலுப்படுத்தி உள்ளது என சுகாதார இயக்குனர் ஜெனரல் முகமது அசாம் அஹமத் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு மீண்டும் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான காற்றோட்டம், வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் நெரிசலான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
