பலுசிஸ்தானில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டா எப்போதுமே கிளர்ச்சித் தாக்குதல்களின் முக்கிய தளமாகக் கருதப்படுகிறது. அந்த நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தை குறிவைத்து நேற்று நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இது வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.என்றும், 15- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவெட்டா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையக நுழைவாயிலில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் மோதி வெடித்ததாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளது. வெடிப்பின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டு, அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறின. சம்பவ இடத்திலேயே சிலர் பலியானார்கள்; பலர் தீவிரமாகக் காயமடைந்ததால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவமனைகள் எச்சரித்துள்ளன.
பலுசிஸ்தான் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பலுச் விடுதலைக் குழுக்கள் (Baloch Liberation Army உள்ளிட்டவை) பாகிஸ்தான் இராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. அத்தகைய தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இச்சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனினும் இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக இந்த தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
