கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற பேமண்ட் ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) சேவைகள். ஐஆர்சிடிசி (IRCTC) என்கிற இந்திய ரயில்வே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மற்றும் பென்சன் (ஓய்வூதியம்) ஆகிய 3 சேவைகளிலும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
யுபிஐ (Unified Payments Interface)
கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆகியவைகளை உள்ளடக்கிய யுபிஐ சேவையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.யுபிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (Unified Payments Interface) அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
என்பிசிஐ என்கிற இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் செயல்படுத்தப்படும் இந்த புதிய மாற்றங்களால் கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள். யுபிஐ சேவையில் பொதுவாக பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றான பியர்-டு-பியர் (பி2பி) பரிவர்த்தனைகள் ஆனது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அணுக கிடைக்காது.
ஐஆர்சிடிசி (IRCTC)
ஆன்லைன் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் தன்மையில் மாற்றம்: ரயில் டிக்கெட் முன்பதிவில் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய ரயில்வே ஆனது அதன் ஆன்லைன் டிக்கெட் முறையை சீர்திருத்த போகிறது. இதன் கீழ் ஆன்லைன் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய விதி அமலுக்கு வருகிறது
அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ஆதார் சரிபார்ப்பு உள்ளவர்கள் மட்டுமே ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்குள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த விதி ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் ஆப் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். தற்போது, இந்த விதி தட்கல் முன்பதிவுகளுக்கு பொருந்தும். இருப்பினும், கணினிமயமாக்கப்பட்ட பிஆர்எஸ் கவுண்டர்களில் இருந்து டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கான நேரமும், செயல்முறையும் பழையபடியே இருக்கும்
ஓய்வு ஊதியம் (pension)
ஓய்வூதிய தாரர்களுக்கான இந்த மாற்றம் பெரும்பாலும் என்பிஎஸ் (NPS), யுபிஎஸ் (UPS), அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana) மற்றும் என்பிஎஸ் லைட்டில் (NPS Lite) சேர்ந்தவர்களுக்கான மாற்றம் ஆகும்.
பிஎப்ஆர்டிஏ (PFRDA) என்கிற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆனது மத்திய பதிவு பராமரிப்பு முகமைகள் (Central Recordkeeping Agencies – CRA) வசூலிக்கும் கட்டணங்களை திருத்தி உள்ளது.
புதிய பிஆர்ஏஎன்-ஐ (PRAN) திறக்கும்போது அரசு ஊழியர்களிடம் இப்போது இ -பிஆர்ஏஎன் கிட்டுக்கு ரூ.18 மற்றும் பிசிகல் பிஆர்ஏஎன் கார்டுக்கு ரூ.40 வசூலிக்கப்படும். வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஒரு கணக்கிற்கு ரூ.100 ஆக இருக்கும். அடல் ஓய்வூதிய யோஜனா மற்றும் என்பிஎஸ் லைட் சந்தாதாரர்களுக்கான கட்டண அமைப்பும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, பிஆர்ஏஎன் திறப்பு மற்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் இப்போது ரூ.15 ஆகவும், பரிவர்த்தனை கட்டணங்கள் ரூ.0 ஆகவும் இருக்கும்.
