ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே மோதல்.. போர் வெடிக்கும் அபாயம்..!

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே மோதல்.. போர் வெடிக்கும் அபாயம்..!
Spread the love

இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான், தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானை தாக்கியதால், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் தொடங்கியுள்ளது.

இரு தரப்பிலிருந்தும் பதிலடி தாக்குதல்கள், வான்வழி தாக்குதல்கள் மற்றும் ராணுவ நிலைகளை ஆக்கிரமித்தல் என போர் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாமாகாணத்தில் தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குள் பிரம்மாண்டமான வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், ‘தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ எனப்படும் பாகிஸ்தான் தலிபான்களின் மறைவிடங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை தாக்கியதாகவும் பாகிஸ்தான் கூறியது.

பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் காபூல், ஜலாலாபாத், மற்றும் பக்டிகா உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டுகளை வீசியதாகவும், ஆனால் அதில் பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்ததாகவும் படங்கள் காட்டுகின்றன. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இந்திய மண்ணில் இருந்தே “பாகிஸ்தான் எங்களை தூண்டக்கூடாது” என்று எச்சரித்தார். அதை தொடர்ந்து, தலிபானின் உச்ச தலைவர் ஹைபத்துல்லா அகுன்ஸாதா ஒரு வானொலி செய்தியை வெளியிட்டார். அதில், “தேசத்தை பாதுகாப்பதே நமது கடமை. ஆப்கானிஸ்தானை பாதுகாக்க தயாராக இருங்கள்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த மோதல் குறித்து இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால பயணமாக இந்தியாவில் இருப்பதால், புது டெல்லி மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

பாகிஸ்தானுடன் சமீபத்தில் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட சவுதி அரேபியா கூட, “இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்” என்று மத்தியஸ்தத்திற்கு ஆதரவளித்துள்ளது. கத்தார் மற்றும் ஈரானும் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் இந்தியாவுடனான பகைமைக்கு மத்தியில், பாகிஸ்தான் தலிபானை தூண்டிவிட்டு தனக்கு மற்றொரு போர் முனையை திறந்துவிட்டுள்ளது.

பல மில்லியன் ஆப்கானிஸ்தான் முஸ்லிம் அகதிகளை கட்டாயப்படுத்தி மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையும் தலிபானின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் என்ற மாவட்டத்தில் ஆப்கான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மூடப்பட்டன. அதே சமயம் பாகிஸ்தானின் 25க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்நிலையில் தான் ஏற்பட்ட ராணுவ மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், ‘தாலிபான்கள் மற்றும் மற்ற படையினரைச் சேர்ந்த 200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் 19க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆப்கானிஸ்தான் அறிவிப்புக்குப் பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவிக்காததும் கவனிக்கத்தக்கது. மேலும் இதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாகப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தாலிபான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *