இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் இன்று சா்வதேச அமைதி மாநாடு நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு உலகத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் காஸா அமைதி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் அமைப்பினா் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்சங்களுடன் கூடிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் முன்மொழிந்தார். அதன் படி ஒப்பந்தகளால் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபந்தனைகள்;
ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தை ஏற்றுக் கொண்டு, எஞ்சியுள்ள பிணைக் கைதிகள்-சிறைக் கைதிகளை விடுவிக்கவும், போரைத் தற்காலிகமாக நிறுத்தவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சில தினங்களுக்கு முன் ஒப்புக் கொண்டன. இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் வகையில், காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்நாட்டுப் படையினா் திரும்பப் பெறப்பட்டுள்ளனா். டிரம்ப்பின் முயற்சிக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் வரவேற்பு தெரிவித்தன. இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, எகிப்துடன் கத்தாரும் மத்தியஸ்தராக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமா் மோடிக்கு அழைப்பு
எகிப்தில் நடைபெறும் அமைதி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடிக்கு அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி அழைப்பு விடுத்துள்ளாா். அதேநேரம், பிரதமா் சாா்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
