தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவ மழை பெய்ய துவங்கி இருக்கும் நிலையில் தமிழகத்தில் நல்ல மழை பொழிந்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை;
இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மித கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
