அரசு முறைப் பயணமாக இந்தாண்டு மே மாதம் கனடா வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அனிதா ஆனந்த் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்தார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தப் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது கனடா வாழ் இந்தியர்களுக்கு நல்ல ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
கனடாவில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து அதிக இந்தியர்கள் கனடாவுக்குச் செல்கிறார்கள். மேலும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அங்குக் கணிசமாக உள்ளனர். இந்தச் சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா கனடா இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.
இந்தியா கனடா உறவு
அந்த மோதல் இப்போது தான் சீராகி வருகிறது. கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். இதற்கிடையே கனடா இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தப் புதிய ரோட் மேப்பிற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. டெல்லியில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதைத் தொடர்ந்தே இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, “அமைச்சர் ஆனந்த்தின் வருகை இந்தியா- கனடா இருதரப்பு உறவுக்குப் புதிய உத்வேகம் அளிக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துப் பேசியிருந்தார். அந்தச் சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்ததாக அப்போதே நமது பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது. வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்த ஒத்துழைப்பு தேவை என்பதைப் பிரதமர் எடுத்துரைத்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அனிதா ஆனந்த் பயணம் அமைந்துள்ளது.
