தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை இயல்புக்கு அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவில் வழக்கமாக 33 செ.மீ மழை பதிவாகும், ஆனால் இந்த முறை 36 செ.மீ பதிவாகும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெரியதாக வெயில் தாக்கம் தெரியவில்லை. குறிப்பாக நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை முதல் மிதமான மழை பொழிந்தது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16 ஆம் தேதிகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. வழக்கமாக அக்டோபர் 20 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என்றும் ஆனால் நடப்பு ஆண்டில் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதி தென்மேற்குப் பருவ மழையை நம்பி இருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வடகிழக்குப் பருவ மழையையே அதிகம் நம்பியுள்ளன.
தமிழகத்தில் வருடத்தின் மழையில் 48 சதவீதம் வடகிழக்குப் பருவமழை மூலமே கிடைக்கிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 60 சதவீத மழை, வடகிழக்குப் பருவமழையை நம்பியே உள்ளது.
